Monday, October 18, 2010

பாவமில்லை....

கண்ணோடு கண் பேசல்..
விரல் நகம் தொடல்...
விரல் பிரித்து ரேகை தேடல்...
கைவளை எண்ணுதல்...
மணிக் கரம் பற்றுதல்....
பூச் சூடுதல்...
குழி விழும் கண்ணத்தை குழைவாய் வருடுதல்...
பாதத்தின் மேல் பாதம் பதித்தல்...
விரிந்த கூந்தலில் விரல் நுழைத்தல்...
மூச்சுக் காற்றுரச காதில் இரகசியம் பேசுதல்...
இதழோடு இதழ் பதித்தல்.....
இறுக்கி அணைத்தல்....
ஊக்கு விலக்குதல்....
இவை எதுவும் பாவமில்லை...
தாய்க்கு மகளிடமும்,
கணவனுக்கு மனைவியிடமும்.

Sunday, October 17, 2010

ங்கொ...ய்...யா....லே.....

                                                  மூன்று நாட்களுக்கு முன்னர்,அலுவலகத்திற்கு வெளியே தன்னந்தனியே சந்தித்த போது கையூட்டு கேட்காத, மிகக் குறிப்பாக கையூட்டு வாங்க மறுத்த ஒரு நில அளவையாளரை என் வாழ்வில் முதன்முறையாக சந்தித்தேன்.

ஒரு உத்தமரை சந்தித்த புளகாங்கிதத்தில் மதியம் 2 மணிக்கு கொளுத்தும் சென்னை வெய்யிலில் குதித்து கும்மாளமிட்டபடி வானகரத்தில் இருந்து மைலாப்பூர் வீடு (என் வாரணாசிரமம் பற்றி இங்கு சிரமப்படவேண்டாம். நான் அவா இல்லை.) வந்தேன்.



                         மேற்படி யோக்கியாம்சம் பெற்ற நில அளவையாளரின் சொல்படி, நேற்று காலை 10 மணி சுமாருக்கு வட்டாட்சியர் அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். 


வழியெங்கும் ஒரு குட்டி வட்டாட்சியர் அளவிற்கான பந்தா மற்றும் விண்ணப்ப படிவங்களுடன் சிலர். அவர்களையே அதிகாரிகளாய் பாவித்து சுற்றிலும் ஒரு கூட்டம்.  ஒரு கூட்டத்தினுள் எட்டிப்பார்த்தேன். படிப்பறிவற்ற ஒரு ஏழை விவசாயக் குடும்பமே சுற்றி உட்கார்ந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. 


" என்ன வேணும் சார்?" 
என்று என்னிடம் ஒரு சின்ன அதிகாரத்தோடு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தவர் கேட்ட கேள்வியை புறம் தள்ளி வட்டாட்சியர் அலுவலகம் உள் புகுந்தேன்.


ஆம்......புகுந்தேன்.......


அடடா.....அரசு அலுவலகங்களுக்கான அதே புழுதி மண்ணும், குப்பையும் கூலமுமாக, மாறாத சகல லட்சணங்களுடன் இந்த அலுவலகமும் இருந்தது. முதலில் இருந்த குளிரூட்டப்பட்ட அறையில் வட்டாட்சியர் அலுவலகம். வாசலில் விண்ணப்பங்களுடன் வரிசையாக 32 பேர். அதில் விமர்சியாக நான்கைந்து பேர்.


அடுத்திருந்த சிறிய தடுப்புக்குள் 8 மேசைகள். சிலவற்றிக்கு இருபுறமும் நாற்காலிகளைப் போட்டு ஒரு மேசையை இரு அலுவலர்கள் பகிர்ந்து கொள்வதுபோல் காட்சியளித்தது.  இருந்த இண்டு இடுக்குகளில் எல்லாம் மிக நல்லவர்கள் போலவும், சாந்தமாணவர்கள் போலவும், பணிவு, பவ்யம் இப்படியாக சகல உணர்வுகளையும் போலியாய் முகத்தில் தேக்கியபடி மஞ்சள் பை முதல் வி.ஐ.பி சூட்கேஸ் வரை கைகளிலும், தோளிலும் மாட்டியபடி ஒரு கூட்டம். நானும் அப்படி ஒரு முகபாவத்தை தேக்கியபடி கூட்டத்திற்குள் ஐக்கியமானேன்.

என் முறை வந்ததும் முகம் உயர்த்திப் பார்த்த அதே நில அளவையாளர் எனை அடையாளம் தேட முயற்சிக்கும் வேலையில் சுய அறிமுகம் செய்ய ஆரம்பித்த உடனே தலையை இரண்டு கைகளால் பிடித்த படி
"ரெண்டு மணிக்கு மேல தானே வரச் சொன்னேன்....இப்பவே வந்தா எப்படி?" என்றார்.
"சாரி சார்...அப்படி எந்த நேரமும் நீங்க குறிப்பிடாததாலதான், நான் 10 மணிக்கே வந்தேன்" என்பதை அதிகபட்ச மரியாதையுடனும், பவ்யத்துடனும் முதுகு வலைந்து சொன்னேன்.
"படிச்சவங்கதான் தொல்லையே" என்று முனுமுனுத்துவிட்டு "ஒரு மணியில வாங்க....பாப்போம்" என்றார்.

பள்ளிகூட காலம் தொட்டே தாசில்தார் அலுவலக அனுபவம் ஒன்றிரண்டு உண்டென்பதால் சமநிலையாய் வெளியில் வந்தேன்.

மரத்தடியில் இருந்த கான்கிரீட் பெஞ்சுகள் நிரம்பியிருந்தன...

சுற்றிலும் பார்த்தேன்...

மேற்க்கு மூலையில் அந்த ஏழை விவசாய குடும்பமும், அதன் தலைவர் போன்றவரும் எதையோ தொலைத்தவர்கைப் போல் வானத்தப் பார்த்தபடி அமைதியாய் இருந்தனர்....

ஏனோ அவர்களின் மேல் ஒரு இரக்கம் பிறந்தது. இன்னும் சற்று நெருங்கிப் போனேன்...

வெறும் தரையில் முந்தானையை விரித்து அதில் தன் குழந்தையைக் கிடத்தி, ஒருக்களித்தபடி ஒரு இளம் பெண் படுத்திருந்தால்...கத்தி கத்தி விலகிய அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் இழுத்து மாரோடு அனைக்க முயற்சி செய்தால் அந்த பெண்...விலகி மறுத்த குழந்தையை அடித்து இழுத்தணைத்தால்....
"ஆமா...புட்டியிலயே குடுத்துப் பழக்கிப்புட்டு, இப்ப மாருக்கு இழு" என்றபடியே அருகில் இருந்த இன்னொரு பெண் வெற்றிலை எச்சிலைத் துப்பினால்.

குழந்தையையும், அவர்களையும் பரிதாபமாய் ஓரக்கண்ணால் கவனித்தபடி கடந்து சென்று என் பைக் மீது அமர்ந்தேன். கையோடு கொண்டு சென்றிருந்த தாய் பத்திரத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். ஏனோ என் ஊரும்,அம்மாவும் ஞாபகம் வந்தனர்.

இருப்பினும் ஒரு மணி நேரம் ஒட்டுவதே பெரும் பாடாக இருந்தது....

சுற்றிலும் சத்தம் போட்டு சொந்தக் கதை பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் மெதுவாக அமைதியாயினர்....

ஐபத்தைந்து நிமிடம் கடந்தது... ஐந்து நிமிடம் தானே... முன்சென்றுவிடலாம் என் நில அளவையாளர் மேசைக்குப் போனேன். நான் நெருங்குவதை ஓரக் கண்ணால் கண்டும், காணாதது போல் குனிந்தபடி ஏதோ ஒரு அலுவலக கோப்பை கவனமாய் பார்ப்பது போன்ற பாவனையில் இருந்தார்...

பத்து நிமிடங்களுக்குப் பின் " சாஆஆஆர்" என்றேன்... ஏனோ என் குரல் எனக்கே அன்னியமாக ஒலித்தது...

லேசாக நிமிர்ந்தவர் ஒரு அதிகார தொணியில் " ஒரு மணிக்கு வரச் சொன்னா ஒன் அவர்ல வந்து நின்னா, நீங்க என்ன ரொம்ப புத்திசாலியா.....சரியா டைம் பாத்துட்டு வாங்க...முதல்ல... சொல்றத சரியா வாங்கிக்கங்க...." திரும்பி நடந்து கொண்டிருந்த என் முதுகின் மேல் இன்னும் ஒரு சில வார்த்தைகளை பே(வீ)சிக் கொண்டிருந்தார்.

மனம் சற்றே வெறுக்கத் தொட்ங்கியிருந்தது. எதோ ஒரு உணர்வில் மேற்கு மூலையைப் பார்த்தேன். இப்போது அந்த பெண் மட்டும் உட்கார்ந்த நிலையில் தலை வாரிக்கொண்டிருந்தாள்...பெரியவர் உட்பட அனைவரும் மண்ணில் படுத்துக்கிடந்தனர். "நம்ம பாடே இப்படி...இவங்க பாடு இங்க எத்தனை மணியோ! எத்தனை நாளோ!!! என்றென்னிய என் மனம் லேசாக சிரித்தது.

கிழக்குப் பக்கம் இருந்த ஒரு மரத்தடிய பெஞ்சில் அமர ஒரு இடம் கிடைத்தது. வேகமாய் சென்று இடம் பிடித்தேன். பிறகுதான் புரிந்தது. ஒவ்வொருவராய் சாப்பிட கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் மணி பன்னிரண்டுதான்.

மனம் இருந்த நிலையில் மந்தை ஆடு போல் நானும் சாப்பிட சென்று வந்தேன்....

அப்பாடி....மணி ஒன்று அடித்து விட்டது...இனி என்ன சொல்வார் பார்ப்போம் என்றெண்ணியபடி உள்ளே நுழைந்தேன்.

நுழை வாயிலை நெருங்கியபோதே யாரோ பெருங் குரலில் " பப்ளிக்குனா பிச்சக்காரன்னு நினைச்சீங்களா? ஐஞ்சு நாளா நடக்குறோம்...தினம் ஒன்னு கொறையுதுன்னு திருப்பி அனுப்பறீங்கலே, நீங்க மனுசங்க தானா...என்னெல்லாம் வேணும்கிறத முத நாளே சொல்லலாமில்ல" அனைவரின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்தவர் அறுபது வயது மதிக்கத்தக்க, கறுத்த குள்ளமான அந்த மனிதர் வித்தியாசமான முறையில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளைப் போல அவ்வளவு பட்டையாக நாமம் போட்டிருந்தார். வழக்கம் போல் அனைவரும் அவரவர் காரியம் ந்டக்க வேண்டும் என்ற சுய நோக்கில் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

யருடைய வார்த்தை தடித்தது என்று தெரியவில்லை...பெரியவர் அதிக பட்ச கோபத்தில் கத்த, அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு பெரியவரை கேரோ செய்தனர்....இங்கு என்ன நடக்கிறது... ஒரு அத்தாட்சிப் பத்திரம் வாங்க என்ன நடைமுறை...என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்...எவ்வளவு நாள் ஆகும்...எதையும் யாரும் சொல்லுவதும் இல்லை...எவரும் சொல்வதுபோல் நடந்துகொள்வதும் இல்லை...

இந்த களேபரத்தில் நான் எங்கு சென்று யாரைப் பார்க்க......

மனதில் வெறுப்பு குமிழ்விட ஆரம்பித்தது...கையிலிருந்த பத்திரங்கள் அடங்கிய பையை தரையில் போட்டு அருகிலேயே மண்தரையில் அமர்ந்து சிரமப் பட்டு மனதை சமாதானம் செய்து கொண்டேன். என்னை அறியாமல் நானும் வானத்தை நோக்கி வெறிக்க ஆரம்பித்தேன். நாமே டரியலாகிவிட்டோம்...இதில் மேற்கு மூலை குடும்பம் எப்படிப் போனால் என்ன என்றெண்ணி அந்தப் பக்கம் திரும்பவே இல்லை....

பத்து நிமிடம் கடந்திருந்தது. சாப்பிட சென்றவர்கள் ஒவ்வொருவராய் வந்து காலி பெங்சுகளிலும், கட்டாந் தரையிலும் செளகரியம் போல அமர்ந்து கொண்டனர்.

சோர்ந்து, தளர்ந்த நிலையில் பசி, தாகம் மேலோங்க பெரிய நாமத்துடன் அந்தப் பெரியவர் வெளியில் வந்து கொண்டிருந்தார்..."என்னைப் பார்த்ததே இல்லை, இதுக்கு முன்னெ இங்க நான் வந்ததே இல்லைன்னு கூசாம சொல்றானுங்க...என்னையே அடையாளம் தெரியலைங்கறான்.....இவனை எல்லாம் பகவான் பாத்துப்பான்...நல்லா இருக்க மாட்டானுங்க" என்று சபித்தபடி எம்80ஐ ஸ்டார்ட் செய்து வெளியே செந்றுவிட்டார்...

அவர் வெளிசெல்லவே காத்திருந்ததுபோல அனைவரும் உள்ளே பாய்ந்தோம். அலுவலகம் அமைதியாக இருந்தது. தயங்கித் தயங்கி ஒவ்வொருவரும் அவரவர் வேலை இருக்கும் மேசையை அடி மேல் அடி வைத்து நெருங்கினோம். பெரியவர் கத்திய வைபரேசன் இன்னும் இருக்கும் என்ற பயம் எங்களுக்கு.

அருகில் நெருங்கியதை உணர்ந்ததுமே தலை நிமிர்திதிய அலுவலர் என்னை மூன்று நாள் முன்பு பார்த்த அந்த ஒரு கனிவான பார்வை பார்த்தார். விரித்து வைத்திருந்த கோப்பை மூடி மேசை மேல் வைத்துவிட்டு அமைதியாக எழுந்து "எங் கூட வாங்க" என்று உள்ளே அழைத்துச் சென்றார். பின் தொடர்ந்த எனக்கு பட்டை நாமக்காரர் முகம் மனதில் வந்து போனது.

ஒரு கோடியில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டி " சி2 அந்த சீட்டுல வந்து உட்கார்ந்ததும் என்னை வந்து கூப்பிடுங்க... அவருக்கு உங்களை காட்டிவிட்டுறேன்...அவருதான் கையேழுத்து போடனும்...அவரு வந்ததும் நான் உங்க ஃபைல அவர்கிட்ட கொடுத்துர்றேன்" என்று கூறிச் சென்றார்.

அன்றய நாளின் முதல் மகிழ்ச்சி மனதில் துள்ளலிட்டது. காலையில் இருந்து மனதில் அலை அடித்த சகல உணர்வுகளும் அகன்று மனம் அமைதியானது. ஒவ்வொரு உணர்வும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும் என்று என்றோ படித்தது வேறு ஞாபகம் வந்து மேலும் உற்சாகமூட்டியது.

சி2வின் இருக்கை கண்ணில் நன்கு தெரியும்படி வாகாக ஒரு இடம் பார்த்து நகர்ந்து நின்று கொண்டேன். ஆர்வமாக அந்த நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு பியூன்கள் வேக வேகமாய் எல்லா மேசைகளுக்கும் கோப்புகளோடு சென்று வந்து கொண்டிருந்தார்கள். அலுவலகமே ஒரு மகிழ்ச்சியான சூலலாய்ப் பட்டது.

கால் லேசாக வலிக்க ஆரம்பித்தது. கால் மாற்றி நின்றது கூட ஒரு சுகமாய்ப் பட்டது.

காலி நாற்காலியையே பார்த்துக்கொண்டிருந்ததால் மனது லேசாக சலிப்புர ஆரம்பித்தது. சன்னல் வழியே வெளியே பார்த்தேன். அதோ...அந்த ஏழைக் குடும்பம். இப்போது அங்கு இருந்த அனைவருமே எழுந்து உட்கார்ந்திருந்தனர். காலையில் இருந்த அமைதியில்லாமல் ஏதோ சல சலவென அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். விவரம் தெரியாமல் மனு எழுதிக் கொடுத்துவிட்டு மரத்தடியிலேயே காத்துக்கிடக்கின்றனரே என்று என் மனம் அங்கலாய்த்தது. சரி. நம் வேலை முடிந்ததும் அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம் என்று தேற்றிக்கொண்டேன்.

அப்போது, வேகமாய் நுழைந்த ஒரு பியூன், சுமக்க முடியாத கனத்தில் இரண்டு கை நிறைய சாப்பாட்டுப் பொட்டலம் நிறைந்த பைகளைச் சுமந்து வந்தார். சுரீர் என்றது எனக்கு. இரண்டு மணிக்கு மேல் ஆகியும் சாப்பிடப்போகாமல் எல்லோரும் வேலை செய்கிறார்களே என்ற பச்சாதாபம் மேலோங்க நில அளவையாளரின் மேசைக்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் "இன்னும் சி2 வரலையா...வந்துருவாரு...இருங்க..இன்னைக்கு சொல்லிவுட்டுட்றேன்" என்றார். உடனே நான் " அது இல்ல சார்... இவ்வளவு நேரம் ஆகியும் சாப்பிடாம கொல்லாம..." என்று நான் இழுக்க...
"என்ன பண்றது சார்... பொழப்பு பப்ளிக் கூடன்னு ஆகிப்போச்சு...நாமக்காரர் எப்படி கத்துனாரு பாத்தீங்கில்ல....நீங்க இருங்க... சி2 வரட்டும்" என்றபோது அவர் மேசைக்கும் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் வந்தது. அவர் சாப்பிடட்டும் என்ற மரியாதை நிமித்தம் நான் மீண்டும் வெளியே வந்தேன்.

இப்போது நிறைய பெஞ்சுகள் காலியாக இருந்தது. என் மனமும் காரியம் வெற்றிகரமாக முடிந்துவிடுமென்பதில் லேசாகிப் போயிருந்தது. கையிலிருந்த பையை தலைக்கு வைத்து மல்லாந்து படுத்தேன். விரிந்து பரந்திருந்த கிளைகளுடே தெரிந்த பசுமை ஒரு சுகானுபவமாய் இருந்தது. மனம் லேசாகி அப்படியே கண் அயர்ந்துவிட்டேன்.

தடால் என்று கதவை அடித்து மூடிய ஜீப்பின் சத்தம் என் தூக்கம் கலைத்தது. ஸ்டார்ட் ஆகி இருந்த ஜீப்பை நோக்கி ஒரு பையில் சில சாப்பாடு பொட்டலங்களுடன் ஒரு பியூன் ஓடி வந்து கதவைத் திறக்க விரைப்புடன் ஒரு சபாரி சூட் அதிகாரி முன் சீட்டில் அமர்கிறார். பின்கதவைத் திறந்து பியூன் கையிலிருந்த பையை உள்ளே வைக்கிறார். அதிகாரியின் பேச்சுக்கெல்லாம் தலையை தலையை சகல பவ்யமாய் ஆட்டிக் கொண்டிருந்தார்.

ஜீப்பைக் கடந்து உள்ளே சென்றேன். அலுவலகம் எங்கும் பிரியாணி வாசனை.சி2 இருக்கை இன்னும் காலியாகவே இருந்தது. மனதை சூன்யம் கெளவ்வுகிறது. மெல்ல சி2 சீட்டின் அருகே உள்ள வேறு ஒரு அதிகாரியை அனுகி விசாரித்தேன். " எப்ப வேனா வந்திருவாரு" என்பதான பதிலை தலை நிமிர்த்தாமல் சொன்னார். கடந்து செல்லும் பியூனோ "கரெக்டா சொல்ல முடியாது சார்..." என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார். என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரே தவிப்பாக இருந்தது.

சட்டென பக்கத்து அறையில் யாரோ சி2 பற்றி பேசுவது போல கேட்கவே, மனம் கொள்ளாமல் உள்ளே நுழைந்து "சி2" என்று ஆரம்பிக்கும் முன்னரே...."யோவ்.. நோ என்ரி போர்டு பாக்கலை...திறந்திருந்தா...நுழைஞ்சுடுங்க..." இன்னும் ஏதேதோ முனுமுனுப்புகளை கேட்க கேட்க மனம் கூச ஆரம்பித்தது.வெய்யிலும், வியர்வையும், காத்திருத்தலும் சேர்ந்து, வெறுமை சூழ - மனம் வெதும்ப ஆரம்பித்தது.

திரும்பி மெயின் ஹாலுக்குல் நுழைகளில் நில அளவையாளர் கையை துடைத்தபடியே தன் இருக்கை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை நோக்கி விரைந்தேன். சற்றே திரும்பியவர் என்னைப் பார்த்து புன்முறுவலித்தார். "பத்து நிமிசம் ....வந்துர்ரேன்..." என்று வெளியில் சென்ற தோரணையில் அது பகைக்கத்தான் என்று உணர்ந்தேன்.

திரும்பவும் சி2 இருக்கைக்கு நேரே வாகாக நின்று கொண்டிருக்கையில் ஒரு தணிமையை உணர்ந்து சுற்றிலும் பார்த்தேன். என்னையும் சேர்த்தே மூன்று பேர் மட்டுமே இருந்தோம். கிட்டத்தட்ட அலுவலகமே காலி.

உண்மையை உணர ஆரம்பித்த நேரம், இரு சக்கர வாகன நிறுத்தத்தில் இருந்த ஒரு வாகனத்தின் பின் இருக்கையில் நில அளவையாளர் ஏறுவதைக் கண்டதும் என் இரத்தம் சூடாகி விட்டது. ஒரே ஓட்டமாக ஓடினேன்.

ஒரு நிமிட ஓட்டத்தில் மூச்சிறைக்க....வண்டி வரும் திசைக்கு எதிர் திசையில் திரும்பி ஓடி அவர் எதிரில் வழியை மறித்தபடி நின்றேன். அதிகமாக மூச்சிறைத்ததில் பேச்சே வரவில்லை. எச்சில் முழுங்க முனைந்த சிறிய கேப்பில் "சி2 கோர்ட்டுக்கு போய் இருக்காரு...அடுத்த வாரம் வாங்க..." என்ற வார்தைகளை காற்றில் பறக்கவிட்டு என் முகத்தைக் கூட பார்க்காமல் முன் இருக்கையில் இருந்தவரோடு ஏதோ பேசியபடியே புழுதியை கிளப்பியபடி சென்று மறைந்தார்.

கிளம்பிய புழுதி என் மனதில் சூறாவளியைக் கிளப்ப, உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒன்று திரட்டி "தூ" என்று துப்பத்தான் என்னால் முடிந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாததால், நொந்து போய் காலியாய் கிடந்த கான்கிரீட் பெஞ்சில் அமர்ந்த்தேன். இன்னும் மூச்சிரைத்தது. சற்றே ஆசுவாசப்படுத்தியபின் தான் அந்த பெஞ்சின் அருகே மேற்கு மூலையில் காலையிலிருந்து காத்துக்கிடந்த அந்த ஏழைக் குடும்பமும் தரையில் குந்தவைத்து உட்கார்ந்திருந்தது.

அவர்களைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. குனிந்த நிலையில் அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பெஞ்சின் மேல் இரு கைகளையும் நன்கு ஊன்றி மூச்சை பெரிதாக இழுத்து விட்டேன். அலை அடித்த மனதிற்கு அந்த பெருமூச்சு சற்று ஆறுதலாய் இருந்தது.

காலை பத்து மணியிலிருந்து இந்த நான்கு மணிவரை நடந்தவற்றை திரும்ப திரும்ப மனம் அசை போட்டது. எனக்கு நானே அசிங்கமாய்ப் பட்டேன். என்ன முயற்சி செய்தும் என் கையாளாகத்தனமும், காலையிலிருந்து அநியாயமாய் ஏமாற்றப்பட்டோமே என்ற எண்ணமுமே மீண்டும் மீண்டும் வந்து என் வேதனையை அதிகப் படுத்திக்கொண்டே இருந்தது. மிகவும் வருத்தமுறச் செய்துகொண்டிருந்தது. வீட்டுக்கு கிளம்பத் தோன்றவே இல்லை.

"யோவ் பெருசு" என்ற பெருங்குரலால் கவனம் கலைந்தது. தரையில் அமர்ந்திருந்த அந்த குடும்பத்தின் எதிரில் காலையில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தவர் நின்று கொண்டிருந்தார்.

"இந்தா...சப்ஜாடா எல்லாம் முடுஞ்சிடிச்சு... என்ன... பெரிய அதிகாரி எல்லாருக்கும் பிரியாணி சொல்ல சொல்லிட்டாரு... ஆயிரத்தைநூறு சேத்து நாலாயிரமா கொடு..." என்றார்.

எதுவும் பேசாத அந்தப் பெரியவர் கையில் சுருட்டி வைத்திருந்த பையை பிரித்து பணத்தை எண்ணி எதிரில் நின்றவரிடம் ஒரு கையால் கொடுத்தபடியே மறு கையால் அந்த பேப்பரை வாங்கிக் கொண்டிருந்தார்.

"யோவ்..பெருசு...ஒவ்வொருதரமும் நீ வேற ஐந்நூறு அடிச்சிர்றே...சரி...சரி... அடுத்த பார்ட்டிய சீக்கிரம் கொண்டுவா..." உட்கார்ந்த இடத்திலிருந்தே காரியத்தை முடித்துக் கொண்டு, மெதுவாக என்னைக் கடந்து ஏழை விவசாய குடும்பம் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த அந்தக் கூட்டம் விலகிச் செல்ல

வாய் பிளந்த நான்........

"ங்கொ...ய்...யா...லே...."

















  

Tuesday, October 12, 2010

ஏன்? எதற்கு? எப்படி? - கேள்விகளைக் கேக்கிறவன் அறிவாளி. எப்ப, யார்க்கிட்ட, எப்படி கேக்கனும்னு தெரிஞ்சவந்தான் புத்திசாலி.  அறிவாளி - சாக்ரடீஸ்; புத்திசாலி - தெனாலிராமன்.

Thursday, October 7, 2010

இப்படி இருக்கத்தான்....

அதிகாலை.

ஆற்றுப் படித்துறையில் நல்ல கூட்டம்.

எல்லோருக்கும் உற்சாக குளியல்.

அப்பொழுது ஆற்று நீரில் ஒரு தேள் உயிருக்குப் போராடியபடி மிதந்து வருகிறது. குளித்துக் கொண்டிருந்தவர்களில் இருந்த ஒரு சந்நியாசி அந்தத் தேளைப் பார்த்தவுடன் அதைக் காப்பாற்ற கைகளில் ஏந்துகிறார். அடுத்த விநாடி தேள் அவரைக் கொட்டிவிட,  தேள் ஆற்றில் விழுந்துவிடுகிறது.

வலியைப் பொறுத்தபடி மீண்டும் அதைக் காப்பாற்ற சந்நியாசி முயற்சிக்க, வேடிக்கை பார்த்த அனைவரும் "தேளைத் தொட்டால் கொட்டும் என்பது கூட தெரியாத சந்நியாசி, சந்நியாசத்தில் என்ன தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்" என்று பரிகாசம் செய்கின்றனர்.

சிறிய போராட்டத்திற்குப் பின் தேளை கரையில் சேர்க்கும் சந்நியாசி கூட்டத்தினரைப் பார்த்து, "யார் தொட்டாலும் கொட்டுவது தேளின் குணம். தத்தளிக்கும் யாருக்கும் உதவுவது மனிதனின் குணம். நான் அதைத்தான் செய்தேன்"என்று கூறிச் சென்றார்.

இப்படி இ ரு க் க த் தா ன்........

மனிதன்?

கைமாற்று கொடுத்த நண்பர் எதிர்பாராத நேரத்தில் திருப்பிக் கேட்க்கும் பொழுது தர்ம சங்கடமாகி விடுகிறது. அதுவே, சந்திக்கும் பொழுது அதைப் பற்றி அவர் பேசவே இல்லை என்றால் கூசிப் போகிறது.

இதுவும் சுகம் தானா?

பெற்றோரை பிரிந்து வாழ வேண்டி வரும்பொழுது, அவர்களின் செல்லப் பெயரை புனைப்பெயராய் கொள்வதில் ஏதோ அவர்களே உடன் இருப்பது போன்ற ஒரு பிரமை.

சமர்ப்பனம்:

தோல்விகளாள் துவண்டுகிடந்த பொழுது, கம்யூட்டரை எனக்கு அறிமுகப்படுத்திய அன்புத் தம்பி தணிகை வேலனுக்கு.........